Monday, June 21, 2010

தமிழும் நானும்

தமிழே என் பேச்சு தமிழே என் மூச்சு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால் தமிழை ஒரு மொழியாக மட்டுமின்றி அதற்கும் மேலாக கருதுபவன் நான். தமிழை ஒரு பாடமாக மட்டுமே கருதும் கூட்டத்தில் ஒருத்தனாக தான் நானும் இருந்தேன். ஒரு காலத்தில் எனக்கு தமிழ் படிக்கவே பிடிக்காது. இருப்பினும் தமிழில் சிறப்பான மதிப்பெண் பெற முடிந்ததற்கு காரணம் என் கையெழுத்து மட்டுமே. இருப்பினும் எனக்குள் ஒரு தமிழ் பற்று உருவாகியதற்கு காரணம் என் தமிழ் வாத்தியார் சகாயராஜ் அவர்களே. ஒவ்வொரு மாணவரிடமும் தமிழ் ஒரு பாடமல்ல அது ஒரு சமூகம் என்ற எண்ணத்தை விதைக்க எண்ணியவர். மற்றவர்கள் மனதில் அது பதிந்ததோ இல்லையோ அனால் என் மனதில் நன்றாக படிந்தது. தமிழை உயர்வாக எண்ணிபார் தமிழ் உன்னை உயர்த்தும் என்றெல்லாம் அடிக்கடி கூறுவார். தமிழ் தமிழ் தமிழ் என்று இடை விடாமல் சொல்லிப்பார் அது அமிழ்து அமிழ்து அமிழ்து என்று கேட்கும் என்பார். அப்போது தான் தமிழ் மீது எனக்கு மிகவும் பற்று உண்டானது. திருக்குறளை நானே நாவல் போல படித்தேன். ஓரளவு அர்த்தமும் கண்டேன். அவர் மதுரை அமெரிக்கன் காலேஜில் தமிழ் பயின்றவர் என்பதும் சாலமன் பாப்பையா அவரது ஆசான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழை ஒரு பாடமாக எண்ணாமல் விரும்பி படித்தேன் பள்ளியில் முதல் மதிப்பென் பெற்றேன். தமிழ் என்னை உயர்த்தியது. இது 12 ஆம் வகுப்பிலும் தொடர்ந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் 12ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் அணைத்து செய்யுள்களையும் நான் மனப்பாடம் செய்து வைத்தேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் அறிந்தேன்.தமிழை இவ்வாறுதான் கற்கவேண்டும் என்று எண்ணினேன். அந்த ஆசானுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கின்றேன்

ஆனால் இன்று என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றபோது அவர் மகன் எனக்கு தமிழ் படிக்க வராது என்றான். அவன் மட்டுமல்ல நம்மில் பலர் தம் தாய் மொழியையே படிக்காமல் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டுமே பிற மொழியை படிக்கின்றனர். அவர்கள் பிற மொழியை கற்பது இல்லை. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால். தமிழ் வளர்வதும் சாவதும் மாணவர்களை சார்ந்தும் இருக்கிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு போல தமிழ் மொழி விழிப்புணர்வும் நடத்தவேண்டும் என நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழை மாணவர்கள் படிக்காமல் விட்டால் தமிழ் இனி மெல்ல சாகாது, விரைந்து சாகும்.


நான் இந்த வலைப்பதிவில் ஒரே ஒரு பிழை இளைத்திருக்கிறேன், அது எங்கே என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

3 comments: